Wednesday, April 2, 2014

கிட்னி அறிந்ததும் அறியாததும்!


“ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?
முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.
அதை எப்படி கண்டுபிடிப்பது..?
வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.
அறிகுறிகள் இருக்குமா..?
இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.
எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?
தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.
தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?
அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
உணவு முறைகள் என்ன?
எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.
எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?
வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?
அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே…?
வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?
முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.
சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்…
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.
இல்லாவிட்டால்…
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.
அப்புறம்…
இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.
இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?
இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.
கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?
என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?
முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?
முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

பெண்களும் யோகமும்

யோக சாதனைகள் என்பது ஆண்களுக்குரியதே என்றும், பெண்கள் உடல் கூற்றின் அடிப்படையில் அது அவர்களுக்கு ஏற்புடையதல்ல என்றும் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இது தவறான கருத்தாகும். யோக சாதனை என்பது மனித குலத்திற்கு பொதுவானதே அல்லாமல் அதில் ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. அன்னை பார்வதி தேவியே நெருப்பில் நின்று கடும் தவம் புரிந்து இடப்பாகம் அடைந்ததாக புராணம் சொல்கிறது.
குண்டலினி யோகத்தைப் பற்றி தமிழ் மூதாட்டியான ஔவையை விடத் தெளிவாக யாரும் சொல்லி விடவில்லை. திருமூலர் தரும் அமுரிதாரணை என்கிற யோகத்தை பெண்களும் செய்யலாம் என்றே சொல்லியிருக்கிறார். ஆண்கள் சுக்கிலத்தைக் கட்டுப்படுத்தியும், பெண்கள் சுரோணிதத்தைக் கட்டுப்படுத்தியும் எந்த யோகப் பயிற்சியும் செய்யலாம். மேலும் அவர் தரும் கூடுதல் தகவல் சுக்கிலம் என்பதுவும், சுரோணிதம் என்பதுவும் விந்து நாதம் கூடியதே. அதாவது விந்துத் தத்துவம் அதிகம் உள்ளது சுக்கிலம், நாதத் தத்துவம் அதிகம் உள்ளது சுரோணிதம். விந்து, நாதம் இரண்டிலுமே இருக்கிறது. ஒவ்வொரு உயிரிலும் விளங்குகிறது.
ஔவையார் வினாயகர் அகவலில் தன் யோக அனுபவங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
''புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி'' என்றும்
''மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால்(காற்றால்) எழுப்பும் கருத்தறிவித்தே'' என்றும் பாடியிருக்கிறார். இது ஒரு சான்றே போதும் பெண்களுக்கு யோகப் பயிற்சியில் தடையேதும் இல்லை என்பதற்கு.
''மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்''. எவ்வளவு தெளிவான வரிகள். மாதவம் செய்திருந்தால் தான் மாதராய் பிறக்கவே முடியுமாம். அப்படியென்றால் அவர்களே ஜென்மாந்திரத்திலும் தவசீலர்கள். பொதுவாக இறைவன் படைப்பில் பெண்களுக்கு மாதவிடாய், கருவுருதல், குழந்தை ஈன்றெடுத்தல், பாலூட்டுதல் போன்ற துன்பங்கள் இருப்பதால், இவர்கள் ஒருபடி இறைவனை நோக்கி முன்னேறினால் அவன் 99 படி கீழே இறங்கி ஓடி வந்துவிடுவான். இதைத்தான் பெண்களுக்கு குண்டலினி விரைவில் கிளம்பும் என்று சொல்வார்கள். இந்த யோக சாதனை இல்லறத்திற்கு இடையூறாக இருப்பதால்தான் பெரும்பாலும் பெண்கள் பக்தி யோகத்தைக் கைகொள்கிறார்கள். வயதாகும் போது எளிதில் யோகம் கைகூடிவிடுகிறது. நல்ல குருவின் திருவருளைப் பெற்றுவிட்ட பெண்கள் குடும்பத்தில் இருந்து கொண்டே மேன்மை அடைகிறார்கள். இதற்கு என் நண்பர் வட்டத்திலேயே உதாரணமாக விளங்குபவர்கள் இருக்கிறார்கள். நேர்மையான மனிதர் கடவுளின் உன்னதமானப் படைப்பு என்பதை உணர்ந்து இரக்கம், மனிதநேயம் போன்ற உயர்ந்த இலட்சியங்களை முனைப்புடன் கடைபிடிக்கின்றனர்.
பொதுவாக பெண்கள் எந்த விஷயத்தையும் உடனே நம்பிவிட மாட்டார்கள். ஆராய்ந்து, உணர்ந்து உண்மைதான் என்பதைக் கண்டு கொண்டால் அச்செயலில் பிடிவாதமாக நின்று வெற்றியடைவார்கள்.
பெண்கள் சாதனையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆண்களைப் போல அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. குடும்பத்தோடு வாழ்வதையே விரும்புவார்கள். அதுதான் நல்லதும் கூட. கற்பையும், குடும்பப் பராமரிப்பையும் கூட அவர்கள் ஒரு தவமாகவே செய்வார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக யோக சாதனையில் மனிதன் வெற்றி பெற காரணமாக இருப்பவளே வாலை என்கிற குண்டலினி சக்திதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே இனியும் இது போன்ற தவறான கருத்துக்களை பரப்புபவர்கள் அதை நிறுத்த வேண்டும்.

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க..


உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.
மன அழுத்தம்
கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
இதய நோய்
கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.
சுவாசக் கோளாறு
சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
தலைவலி
எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.
மாரடைப்பு
பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளை வாதம்
மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

வியாபாரி வியாபாரிதான்..!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
நீதி :- வியாபாரி வியாபாரிதான்..!